மிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, டெல்டா மண்டலத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் முயற்சியில் அதிமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஆளுங்கட்சியான திமுக ஏற்கனவே இப்பகுதியில் பல்வேறு வழிகளில் மக்களைக் கவரத் தொடங்கியுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக அதிமுகவும் தற்போது தேர்தல் களப்பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தஞ்சாவூரில் திமுகவினர் ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி வைத்து ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கிய நிலையில், அதிமுகவினர் தற்போது அதே பாணியில் பரிசுப் பொருட்கள் மூலம் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள மகளிருக்கான குல விளக்கு திட்டம், ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் மற்றும் இருசக்கர வாகன மானியம் உள்ளிட்ட 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களுடன், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு புதிய ‘ஹாட்பாக்ஸ்’ வழங்கப்பட்டு வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் உள்ள 20 தொகுதிகளில் கடந்த முறை பெரும்பான்மையான இடங்களை திமுகவே கைப்பற்றியது. இந்த முறை அந்த நிலையை மாற்றி, அதிமுகவின் கோட்டையாக இப்பகுதியை மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் முன்னாள் அமைச்சர்களும், வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளும் சொந்தச் செலவில் இந்தத் தேர்தல் வியூகத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த அதிரடிப் பரிசு மழையினால் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் தற்போது பெரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
