தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு 2026-27ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் மூலம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டம் குறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தவெக அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக பொய்த்துப்போகச் செய்து ஏமாற்றம் அளித்துள்ளதாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தவெக அரசின் 5 ஆண்டு கால முடிவில் மாநிலத்தின் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என தான் ஏற்கனவே கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், கடன் சுமையைக் குறைக்க முடியாது என்பதை நிதித்துறை செயலாளரின் பேட்டியே தெளிவுபடுத்துவதாகக் கூறினார். கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.22,000 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும், ரூ.3,000 கோடி மூலதனச் செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதே நிலை நீடித்தால் தவெக அரசு மேலும் 10 லட்சம் கோடி கடன் வாங்கவேண்டிய சூழல் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
மேலும், மாநிலத்தின் சொந்த வருவாயைப் பெருக்குவதற்கான திட்டங்களோ, கசிவுகளை அடைப்பதற்கான வழிகளோ பட்ஜெட்டில் இல்லை என்று குற்றம்சாட்டினார். பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி குறைக்கப்பட்டு, தொல்லியல் துறைக்கு வெறும் ரூ.1 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது போதாது என்றும் சாடினார். முக்கியமாக, மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் உள்ளிட்ட தவெகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
