தமிழக சட்டப்பேரவையில், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் தனது தொகுதிக்குட்பட்ட கானாங்காடு ஊராட்சியில் நிலவும் தீவிரமான சுகாதாரப் பிரச்சினை குறித்துப் பேசினார். சுமார் 8000 பேர் வசிக்கும் அந்த ஊரின் தண்ணீரில் அதிக அளவு சுண்ணாம்பு மற்றும் கால்சியம் சத்து இருப்பதால், பொதுமக்களுக்குக் கடுமையான சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் 19 பேர் பலியாகியுள்ளதாகவும், தற்போது 15 பேர் வரை டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி இது தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்துப் பேசிய அதிமுக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், பேரவை நடவடிக்கைகளின் போது அரசு அதிகாரிகள் அமரும் மாடம் கடந்த மூன்று நாட்களாக காலியாகவே இருப்பதாகக் குற்றம் சாட்டினார். கேள்வி நேரம் இல்லாத நிலையிலும் தங்களுக்குப் பேச அனுமதித்த சபாநாயகருக்கு நன்றி கூறிய அவர், அவையில் சபாநாயகர் வந்து அமர்ந்த உடனேயே அரசுத் துறை செயலாளர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக மாடத்தில் இருக்க வேண்டும் என்று தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.
வழக்கமாக சட்டசபையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள், முதலமைச்சர் உரை, பட்ஜெட் தாக்கல் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்கள், தனிச் செயலாளர்கள் அல்லது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சுழற்சி முறையில் மாடத்தில் அமர்ந்திருப்பது மரபாகும். ஆனால், தற்போது அந்த நடைமுறை பின்பற்றப்படாமல் எந்தவொரு அரசு அதிகாரியும் அவையில் இல்லாதது குறித்து தளவாய் சுந்தரம் கண்டனம் தெரிவித்தார். இனிமேலாவது செயலாளர்களை மாடத்தில் அமர அறிவுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததைக் கேட்டு, சபாநாயகரும் உடனடியாக அதிகாரிகள் அமரும் மாடத்தைத் திரும்பிப் பார்வையிட்டார்.
