“இரண்டு குழந்தைகளை தீ வைத்து எரித்த தாய்”…. கோயில் திருவிழாவில் நடந்த அநியாயம்…. மதுபோதை கணவனால் பறிபோன 3 உயிர்கள்…. தென்காசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

By Nanthini on ஐப்பசி 7, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிப்பாண்டி (32). பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கும் மாரியம்மாள் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, கபினேஸ்வரன் (5), ரபினேஸ்வரன் (4) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். முதல் வகுப்பு படித்து வந்த கபினேஸ்வரன் மற்றும் அங்கன்வாடியில் படித்து வந்த ரபினேஸ்வரனுடன் மாரியம்மாள் வசித்து வந்த நிலையில், மதுப்பழக்கம் உடைய காளிப்பாண்டி அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், ஊரில் உள்ள காளியம்மன் கோயில் புரட்டாசி கொடை விழாவின் முளைப்பாரி கும்மிப் பாட்டு நிகழ்ச்சியை மாரியம்மாள் தனது மகன்களுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த காளிப்பாண்டி மீண்டும் தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த மாரியம்மாள், குழந்தைகளுடன் வீட்டிற்குத் திரும்பி வந்து கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு, பெட்ரோலை ஊற்றி குழந்தைகள் மீதும் தன் மீதும் தீ வைத்துக்கொண்டார்.

   

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளையும் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

   

தகவலறிந்து வந்த சிவகிரி காவல் ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் தலைமையிலான போலீசார் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டு சிறு குழந்தைகளும் உயிரிழந்த இச்சம்பவம் வடக்குசத்திரம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.