கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (76) என்பவர் தனது மகள் மீனாட்சி (32), மருமகன் சதீஷ் (34), பேரன்கள் பனிஸ்(5), ரித்விக் (4) ஆகியோருடன் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள மந்திராலயம் ராகவேந்திர ஸ்வாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று குடும்பத்தோடு சென்றுள்ளார். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோட்டைகள் என்ற இடத்தில் காரில் அவர்கள் சென்றபோது சாலையில் எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேரு மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேருமே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஐந்து பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் சேத்தன் மற்றும் அதே காரில் பயணித்த கங்கம்மா என்ற பெண்ணும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்துக்கு காரணமான எதிரே வந்த மற்றொரு கார் சம்பவ இடத்திலிருந்து மாயமானதாக தெரிகிறது. தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
