“அவன் கூட போன.. என் கூட லாட்ஜிக்கு வரியா”… தவெக நிர்வாகிகளின் அத்துமீறல்… பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்… தமிழகமே அதிர்ச்சி…!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவர், தங்களுக்குத் தெரிந்த பெண்ணை வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தனியார் விடுதியில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளான தவெக நிர்வாகிகள் இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்துக் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

   

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தான் 1997-ஆம் ஆண்டு முதல் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வந்ததாகவும், தொடர்ந்து அவரது ரசிகர் மன்றத்திலும், பின்னர் தற்போதைய தமிழக வெற்றிக்கழகத்திலும் தீவிரமாகப் பணியாற்றி வந்ததாகக் குறிப்பிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அன்னை விஜி சரவணனுடன் இணைந்து கட்சிப் பணி செய்து வந்ததாகவும், அப்போது பாலா என்ற நிர்வாகியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறினார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி தொழிலில் கமிஷன் வாங்கித் தருவதாகவும், அதற்கு வங்கிக் கணக்கு முடித்துத் தருமாறும் பாலா முதலில் கேட்டதாகவும், சட்டவிரோதத் தொழில் என்பதால் தான் அதற்கு மறுப்பு தெரிவித்து அவரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டதாகவும் அவர் விவரித்தார்.

   

இதன் பின்னர், கடந்த மே 3-ஆம் தேதி, தான் சந்தித்து வரும் கடன் தொல்லையைத் தீர்க்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணனின் லாட்டரி தொழிலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலா தன்னை காரில் அழைத்துச் சென்றுள்ளார். காரில் செல்லும் வழியில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாகவும், சுயநினைவை இழந்த தன்னை தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலாவும் அவருடன் இருந்த மற்றொரு நபரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கதறினார். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, சட்டமன்ற உறுப்பினர் சரவணன் சொல்லித்தான் உன்னை அழைத்து வந்தோம் என்றும், வெளியே சொன்னால் குழந்தையைக் கொன்று விடுவோம் என்றும் மிரட்டியதாகக் கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.

 

இந்தத் துயரம் குறித்துச் சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் நேரில் சென்று முறையிட்டபோது, அவர் இந்தச் சம்பவத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் விஜய் அண்ணனிடம் பேசி நல்ல வேலை வாங்கித் தந்து சரிசெய்து விடுவதாகவும் தொலைபேசியில் சமாதானம் செய்ய முயன்றதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார். மேலும், குற்றவாளிகள் இருவரும் சட்டமன்ற உறுப்பினரின் பங்களாவில் வைத்துதான் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர்களுக்குச் சட்டமன்ற உறுப்பினர் சரவணனே புகலிடம் அளித்தார் என்றும், எனவே இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள அவர் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தற்போது இந்தச் சம்பவத்தால் ஊர் மக்கள் தன்னைத் தரக்குறைவாகப் பேசுவதாகவும், தவெக சார்பில் யாரும் தனக்கு ஆறுதல் கூற வரவில்லை என்றும் ஆதரிப்பார் இன்றி தவிப்பதாகக் கூறினார். சென்னைக்குச் சென்று தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோரிடமும் புகார் மனு அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தில் குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்படும் கடுமையான தண்டனை போல, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குக் காரணமான மூன்று பேர் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், தமிழக முதலமைச்சர் தலையிட்டு தனக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்றும் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.