குழந்தைகளிடையே ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கத்தைக் குறைத்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உருவாக்கப் பள்ளிகளில் பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் வயிற்றுக்குள் புழுக்கள் உருவாகும் என்று விளக்குவதற்காக, வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் நடத்திய வினோதமான செய்முறை வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 39 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஒரு மாணவரைப் படுக்க வைத்து போலியான ஸ்கேன் கருவி மூலம் அவரது வயிற்றுக்குள் புழுக்கள் நெளிவது போன்ற காட்சியை ஆசிரியர் மற்ற மாணவர்களுக்குக் காட்டுகிறார்.
இந்த விழிப்புணர்வு முறையைக் கண்டு வகுப்பறையிலிருந்த பல குழந்தைகள் அதிர்ச்சியடைந்து அழத் தொடங்கிய காட்சிகளே சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. ஆரோக்கியமான உணவின் அவசியத்தைக் கற்றுக்கொடுப்பது நல்லது என்றாலும், சிறு வயதிலேயே குழந்தைகளை இப்படி அச்சுறுத்துவது அவர்களின் மனநலனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல பயனர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பயத்தை விதைப்பதற்குப் பதிலாக, சத்துள்ள உணவுகளின் நன்மைகளைப் புரியவைத்து அவர்களை நல்வழிப்படுத்துவதே சிறந்த அணுகுமுறை என்று கல்வியாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதேவேளையில், இத்தகைய முயற்சிகளுக்கு சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஜங்க் ஃபுட்களால் ஏற்படும் ஆபத்துகளை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ள இதுபோன்ற காட்சி விளக்கங்கள் (Visual demonstration) ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அவர்களின் வாதமாக உள்ளது. எது எப்படியாயினும், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எந்தளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு அதை வெளிப்படுத்தும் முறையும் கவனமாகவும், அவர்களின் பிஞ்சு மனதைப் பாதிக்காத வகையிலும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
