கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சிகள் முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, 24 வயதுடைய ஆங்கில ஆசிரியர் அகஸ்டின் என்பவர், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை வீட்டிற்கு அனுப்பாமல் காக்க வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அதிலிருந்து தப்பித்துச் சென்ற சிறுமி, நடந்த சம்பவத்தை தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும், தகவலறிந்த கிராம மக்களும் பள்ளியில் திரண்டு ஆசிரியர் அகஸ்டினிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அகஸ்டின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்த செய்தி பரவியதால், குழந்தைப் பாதுகாப்பைக் கருதி அச்சமடைந்த பல பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்து தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே நடந்த இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
