உத்தரப் பிரதேச மாநிலம் ஏடாவா மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர் தினேஷ் குமார் மாத்தூர் என்பவர், வகுப்பறையில் சிறுவன் ஒருவனின் தலையை தபலா வாசிப்பது போல் தட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவருக்கு முன் தரையில் அமர்ந்திருந்த குழந்தையின் தலையில் அவர் மீண்டும் மீண்டும் தட்டுவதும், அருகில் இருக்கும் மற்ற குழந்தைகள் அதைப் பார்த்து சிரிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஆசிரியர் மாத்தூர் இந்த வீடியோவை அவரே பதிவு செய்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, அடிப்படை கல்வித் துறை இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டது. ஆசிரியரின் இந்தச் செயல் ஒழுங்கீனமானது எனக் கருதி, மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி டாக்டர் ராஜேஷ் குமார், அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இச்சம்பவம் குறித்து கல்வித் துறை முறைப்படி விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், அதன் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. வகுப்பறைகளில் குழந்தைகள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதையும், ஆசிரியர்களின் பொறுப்பான நடத்தையின் அவசியத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
