ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 2-ஆம் வகுப்பு ஆசிரியையாகப் பணியாற்றி வந்த 30 வயதான சந்தியா கர்ஹானா என்பவரை, அமித் என்ற நபர் பள்ளிக்கூட வளாகத்திற்குள் புகுந்து கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். முகத்தை முகமூடியால் மூடிக்கொண்டு வந்த அந்த நபர், ஆசிரியையின் கணவர் வந்திருப்பதாகப் பொய் கூறி அவரை வகுப்பறையிலிருந்து வெளியே வரவழைத்துள்ளார். நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கண்முன்னே, வெறும் 40 விநாடிகளுக்குள் ஆசிரியையின் கழுத்து, மார்பு மற்றும் வயிற்றில் 25-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
படுகாயமடைந்த ஆசிரியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி இரண்டு மணி நேரத்திற்குள் இரத்தக் கறைகளுடன் சுற்றிய குற்றவாளியைக் கைது செய்தனர். கொலையாளி அமித் கடந்த சில மாதங்களாகவே ஆசிரியையைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக ஆசிரியை எச்சரித்ததால் ஆத்திரமடைந்து இந்தத் திட்டமிட்ட படுகொலையை அரங்கேற்றியதாகவும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
