டெல்லியில் உள்ள ஒரு பார்லரில் டாட்டூ குத்திக் கொண்ட 32 வயதுப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த இந்தப் பெண், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது. அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் டாட்டூ குத்தியபோது, முறையாக ஸ்டெர்லைஸ் செய்யப்படாத அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஊசியைப் பயன்படுத்தியதே இந்தத் தொற்று பரவுவதற்குக் காரணம் என மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத தரம் குறைந்த டாட்டூ நிலையங்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுத்திகரிக்கப்படாத ஊசிகளைப் பயன்படுத்துவது எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ்-பி போன்ற ரத்தத்தின் வழியே பரவக்கூடிய கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால், டாட்டூ குத்துவதற்கு முன் ஊசிகளின் சுகாதாரத்தை உறுதி செய்வது அவசியமாகும். மேலும், டாட்டூக்களில் பயன்படுத்தப்படும் தரமற்ற மைகள் தோலில் கடுமையான ஒவ்வாமை மற்றும் அரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான நிலையங்களைத் தேர்ந்தெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
