தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனையில் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழக அரசின் புதிய சட்டம் எண் 13/2026-ன் படி அதிரடியான புதிய நடைமுறைகள் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. இதுவரை பாட்டில் விலைக்கு மேல் காலி பாட்டிலுக்காக தனியாக வசூலிக்கப்பட்டு வந்த 10 ரூபாய் இனி ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி என்ற பெயரில் இந்த 10 ரூபாய் பாட்டிலின் அச்சிட்ட விலையிலேயே சேர்க்கப்படுவதால், இனி கூடுதல் பணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
இந்த புதிய மாற்றத்தின்படி, மதுபாட்டில்களை எந்தவொரு டாஸ்மாக் கடையிலும் திருப்பி கொடுத்து, அந்த 10 ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் ஒவ்வொரு பாட்டிலிலும் கலால் வரி மற்றும் பை-பேக் என இரண்டு கியூஆர் கோடுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. விற்கும் போதும், காலி பாட்டிலை வாங்கும் போதும் இந்த கியூஆர் கோடுகள் ஸ்கேன் செய்யப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பின்னரே பணம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
காலி பாட்டில்களைச் சேகரித்து ஸ்கேன் செய்து பராமரிக்கும் பணியில் ஈடுபடும் கடைப் பணியாளர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, கடைகளுக்கு கூடுதல் கையாளும் கட்டணம் (Handling Charge) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விற்பனைக்கேற்ப நாள் ஒன்றுக்கு ரூ.750 முதல் ரூ.2,000 வரை கடைகளின் வகைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு, மேற்பார்வையாளரின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் முன்பணமாக செலுத்தப்படும்.
மேலும், “மது பாட்டில்கள் அச்சிட்ட விலைக்கு மட்டுமே விற்கப்படும், கூடுதல் வசூல் இல்லை, காலி பாட்டிலுக்கு 10 ரூபாய் உண்டு” என்ற அறிவிப்புப் பலகையை அனைத்துக் கடைகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அக்டோபர் 31-க்குள் வைக்க வேண்டும் என்றும், பணியாளர்களுக்குத் தேவையான பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
