தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் உட்கட்டமைப்பு மற்றும் தூய்மையைப் பேணும் வகையில், கடைகளுக்குத் தேவையான மாதாந்திர பராமரிப்புத் தொகையை உயர்த்தி வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மாதம் ரூ.5,000 வரை பராமரிப்புத் தொகையாக வழங்கப்படும். மேலும், நகராட்சிப் பகுதிகளில் இயங்கும் கடைகளுக்கு மாதம் ரூ.4,000 என்றும், ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள கடைகளுக்கு மாதம் ரூ.3,000 என்றும் இந்தத் தொகை பிரித்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் மாதாந்திர ஊதியம் ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊதிய உயர்வைத் தொடர்ந்து தற்போது கடைகளின் பராமரிப்புச் செலவுகளுக்காகவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தொகை மூலம் கடைகளின் தூய்மை, மின்சாரப் பராமரிப்பு மற்றும் அன்றாட செயல்பாட்டுத் தேவைகள் எவ்வித சிரமமும் இன்றி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
