தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பார்களை உடனடியாக மூடுமாறு டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டு ஆண்டு காலத்திற்கு வழங்கப்பட்ட பார்களுக்கான உரிமம், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஜூன் 30 வரை தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், மேலும் காலநீட்டிப்பு வழங்கப்படாமல் தமிழகத்தில் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்களை மூடுவதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுவதாகவும், அடுத்த உத்தரவு வரும் வரை பார்களை இயக்கிக் கொள்ளலாம் என்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்ததாக பார் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஒரே நாளில் பார்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்காகத் தயார் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களும் பிற பொருட்களும் வீணாகி, தங்களுக்குப் பெரும் பொருள் சேதமும் நிதி இழப்பும் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் திடீர் உத்தரவைத் தொடர்ந்து, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை நிர்வாக அலுவலகத்தில் இன்று அவசர ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால், பார்களுடன் சேர்த்து தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் பூட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக சங்கத்தின் தலைவர் அன்புசெல்வன் மற்றும் பொருளாளர் ராமநாதன் ஆகியோர் கூட்டாக எச்சரித்துள்ளனர். இதனால் பார்களுடன் சேர்ந்து மதுக்கடைகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மூடப்பட்டுள்ள பார்கள் அனைத்தும் உடனடியாகத் திறக்கப்படாது என்றும், அரசு புதிய டெண்டர்களை அறிவித்து, அவை இறுதி செய்யப்பட்ட பின்னரே தகுதியான பார்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, பார்கள் மூடப்படுவதால் பொதுமக்கள் சாலைகள், பூங்காக்கள் அல்லது இதர பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் என்றும், விதியை மீறி பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
