அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்குப் போட்டியாக, திமுக அரசு கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கல்விக் கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களின் எதிர்பார்ப்பு தற்போது நகைக் கடன் தள்ளுபடி பக்கமும் திரும்பியுள்ளது. இதனை உணர்ந்த ஆளுங்கட்சி, கடந்த தேர்தலைப் போலவே இப்போதும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிடத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
தற்போது தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் குறித்த விரிவான புள்ளிவிவரங்களைச் சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தகுதியான பயனாளிகளைக் கண்டறிந்து, முறைகேடுகள் ஏதுமின்றி இந்தச் சலுகையை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தரவுச் சேகரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து நகைக் கடன் தள்ளுபடி குறித்த அதிகாரப்பூர்வமான ‘நல்ல செய்தி’ வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
