தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி புரிந்து வந்த சூழலில், மக்கள் எதிர்பார்த்த அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றி கழகம்’. 2024-இல் தொடங்கப்பட்ட இக்கட்சி, குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளதோடு, விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளைத் தவெக அரசு வரிசையாக வெளிச்சத்திற்குக் கொண்டு வரத் தொடங்கியுள்ளது.
நிதி நிலைமை மற்றும் மின்சாரத் துறையில் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தேவையற்ற செலவுகள், கடன் சுமை, மின்வாரிய இழப்பீடு மற்றும் டெண்டர் முறைகேடுகள் குறித்த வெள்ளை அறிக்கைகளை நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி. நிர்மல்குமார் ஆகியோர் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்த முன்னாள் அமைச்சர்களான எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, சிவசங்கர், தாமோ அன்பரசன் உள்ளிட்டோரை நோக்கி தவெக அரசின் நடவடிக்கைகள் பாயத் தொடங்கியுள்ளன. விரைவில் இவர்களது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடிச் சோதனைகள் நடைபெறக்கூடும் என்ற தகவலும் வெளியாகி, அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தவெக அரசின் முதலாவது வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட உள்ளது. இக்கூட்டத்தொடரில் தவெகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கான உரிமைத் தொகை ₹2,500-ஆக உயர்வு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை மற்றும் ‘தாய்மாமன் சீர்’ உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உச்சத்தை எட்டியுள்ளது. அதேநேரத்தில், கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்படாத திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் மற்றும் துறைசார்ந்த ஊழல்கள் அடங்கிய முழுமையான பட்டியலைத் தயார் செய்து, பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தனியறிக்கையாகத் தாக்கல் செய்ய தவெக அரசு ஆயத்தமாகி வருகிறது.
இது குறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறுகையில், “கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுகவினர் எவ்வித மனசாட்சியுமின்றிச் செயல்பட்டனர்; பார்ட்டி ஃபண்ட் முறைகேடுகள் குறித்து ஆடிட்டிங் செய்யப்பட்டு வருகிறது. வரவிருக்கும் கூட்டத்தொடரில் இதற்கான முழு ஊழல் பட்டியலும் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்படும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தவெக அரசின் இந்த அதிரடி நகர்வுகளும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான நெருக்கடிகளும் தமிழக அரசியல் களத்தில் கடுமையான சூட்டை ஏற்படுத்தியுள்ளன.
