தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், தென் கிழக்கு இலங்கை மற்றும் இந்திய பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தம் மண்டலமாக வலுப்பெற்று வட தமிழக மற்றும் ஆந்திர கடலோர பகுதிகள் வழியாக நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரிக்கும். நாளை தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
