சென்னையில் நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசு மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது அதிரடி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் ‘பிரமோஸ் ஏவுகணையாக’ மாற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், மொழிப்போர் தியாகிகளைக் கொன்ற காங்கிரஸுடன் கைகோர்த்துக்கொண்டு, அவர்களுக்கு திமுக மரியாதை செலுத்துவது தியாகிகளின் ஆன்மாவை அவமதிக்கும் செயல் என்றும் சாடினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பேசிய தமிழிசை, அவர் தனியாக நின்றால் அரசியலில் ‘ஜீரோ’ தான் என்றும், அவரது பேச்சு அனுபவமற்ற ஒரு சிறுவனின் பேச்சைப் போலவே இருப்பதாகவும் குறிப்பிட்டார். தானும் அண்ணாமலையும் உயர்ந்த பதவிகளைத் துறந்துவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளோம் என்று கூறிய அவர், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஜெயிக்க எம்.ஜி.ஆர் போலப் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். திமுகவின் போராட்டங்கள் அனைத்தும் குடும்ப முன்னேற்றத்திற்காகவே தவிர, நாட்டுக்காக அல்ல என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
