தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய களம், புதிய உத்திகளோடு தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணிசமான இடங்களைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக), வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாய மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அரியலூர், விழுப்புரம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் ஒரு தொகுதியைக் கூட கைபற்ற முடியாத நிலையில், பாமக-அதிமுக கூட்டணி அங்கு 32 இடங்களை வென்று தன் கோட்டையைத் தக்கவைத்துக்கொண்டது. கடந்த தேர்தலில் பட்டியல் இன மக்களின் வாக்குகளை மட்டுமே குறிவைத்து செயல்பட்டதே இந்தத் தோல்விக்குக் காரணம் என தவெகவினர் சுயபரிசோதனை செய்துள்ளனர்.
இந்த அரசியல் சவாலை முறியடித்து, வட மாவட்டங்களில் தங்களது வாக்கு வங்கியைப் பலப்படுத்த தவெக தலைமை தற்போது ‘ஆபரேஷன் நார்த்’ (Operation North) என்ற அதிரடிப் புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை அடையாளம் கண்டு, அவர்களை தவெகவில் இணைப்பதே இவரது முக்கியப் பணியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தவெகவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருவதால், வரும் காலங்களில் வன்னியர் வாக்குகளைப் பெறுவதில் ஏற்படப்போகும் சவால்களை முன்கூட்டியே சமாளிக்க இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வட மாவட்டங்களில் தவெக கால்பதிக்க வேண்டுமானால், அங்கு பலமாக இருக்கும் பாமகவின் அடிமட்டக் கட்டமைப்பைச் சிதைப்பது அவசியம் என்பதை தவெக தலைமை உணர்ந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை தவெக தன் பக்கம் இழுத்து திரைமறைவு வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதே சமயம், பாமக தலைவர் அன்புமணியை நேரடியாக விமர்சித்தால் அது அந்த சமுதாய மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கிவிடும் என்பதால், தவெக தலைவர் விஜய் அவரை நேரடியாக விமர்சிப்பதைத் தந்திரோபாயமாகத் தவிர்த்து, பாமகவின் தொண்டர் பலத்தை மெல்ல மெல்லக் கரைக்கும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் கரூர் மற்றும் டெல்லிக்குச் சென்று திரும்பிய முதலமைச்சர் விஜய், அடுத்த கட்டமாக தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு நேரில் சென்று புதிய திட்டங்களை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தத் தொடர் நடவடிக்கைகள் மற்றும் வியூகங்கள் மூலம், வரும் 2029 மக்களவைத் தேர்தலில் வட மாவட்டங்களை முழுமையாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தவெக தொண்டர்கள் களமிறங்கியுள்ளனர். தவெகவின் இந்த ‘ஆபரேஷன் நார்த்’ பாமகவின் கோட்டையைத் தகர்க்குமா அல்லது வன்னியர் சமுதாயத்தின் ஆதரவோடு தவெகவின் தேசிய அளவிலான லட்சியம் நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…
ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…