தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் துணை நடிகையாகவும், சின்னத்திரை தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகை வாஹினி (பத்மா), புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி தனது சொந்த ஊரான விஜயநகரத்தில் உயிரிழந்தார். இவரது மறைவுச் செய்தி தென்னிந்திய திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கராத்தே கல்யாணி சமூக வலைதளத்தில் வாஹினியின் மறைவு குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். வாஹினியை காப்பாற்ற தாங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 1978-ல் பிறந்த வாஹினி, 2019-ல் வெளியான ‘ரகுபதி வெங்கய்ய நாயுடு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
