திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னைச் சந்தித்துப் பேசியபோது, மதிமுக எம்.எல்.ஏ-க்களைப் பதவி விலகச் சொன்னதாகக் குறிப்பிட்டு பரபரப்பைக் கிளப்பினார். வைகோவின் இந்த வெளிப்படையான பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
வைகோவின் இந்த தற்போதைய கருத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா தனது விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “குதிரை பேரம், கழுதை பேரம் இல்லாமல், அடி மாட்டு ரேட்டுக்கு ஏதேனும் பேரம் நடந்ததோ என்னவோ என்று நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன்; அதற்கு ஆமாம் என்று அண்ணன் வைகோவே தற்போது ஒத்துக்கொண்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஜய்யின் அரசியல் நகர்வுகளையும், வைகோவின் முடிவையும் திமுக தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது.
