2027 ஐபிஎல் தொடருக்கான டிரேடிங் பேச்சுவார்த்தைகள் தற்போதே திரைமறைவில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஏற்கனவே பல்வேறு வீரர்களை மாற்றிக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், தற்போது புதிய பரபரப்பு ஒன்று தொற்றிக்கொண்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், தன்னை டிரேடிங் முறையில் சிஎஸ்கே அணிக்கு அனுப்பி வைக்குமாறு தனது நிர்வாகத்திடம் அடம் பிடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர் போன்ற உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களும் ஆல்-ரவுண்டர்களும் ஏற்கனவே முதன்மை இடத்தைப் பிடித்துள்ளனர். இதன் காரணமாக, மிகச்சிறந்த திறமை இருந்தும் சாய் கிஷோருக்கு ஆடும் லெவனில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதே நிலை நீடித்தால் அணியில் ஓரங்கட்டப்படலாம் என்ற அச்சத்தில், தனக்கு நன்கு பரிச்சயமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற அவர் தீவிரமாக முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. சாய் கிஷோரின் இந்த கோரிக்கைக்கு குஜராத் நிர்வாகமும் சம்மதிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பின் அணியைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய ஒரு தரமான இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரைத் தீவிரமாகத் தேடி வருகிறது. கடந்த சீசனில் பிரசாந்த் வீருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட போதிலும், அவரால் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. சேப்பாக்கம் மைதானத்தின் சூழலுக்கு சாய் கிஷோர் போன்ற ஒரு உள்ளூர் வீரர் கிடைத்தால், அது சிஎஸ்கே-வின் சுழற்பந்து வீச்சை மேலும் வலுப்படுத்தும் என்பதால், இந்த டிரேடிங் டீலுக்கு சென்னை நிர்வாகம் நிச்சயம் பச்சைக்கொடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டிரேடிங் ஒப்பந்தத்தின்படி, சாய் கிஷோருக்கு மாற்றாக சிஎஸ்கே அணி தங்களின் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயஸ் கோபால் அல்லது பிரசாந்த் வீரை குஜராத் அணிக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி ஆயுஷ் மாத்ரேவைக் கேட்டும், டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகள் டிவோல்ட் பிரேவிஸை முன்னிறுத்தியும் சிஎஸ்கே-விடம் நடத்திய பேச்சுவார்த்தைகளை சென்னை நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தச் சூழலில், தமிழக வீரர் சாய் கிஷோர் சிஎஸ்கே-விற்கு வர ஒற்றைக்காலில் நிற்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
