திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறப்போவதாகத் தொடர்ந்து எழுந்து வரும் விமர்சனங்களுக்குத் தமிழக அமைச்சர் எஸ். ரகுபதி கடும் பதிலடி கொடுத்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து தாங்கள் யாரையும் வெளியேற்றும் பழக்கம் இல்லை என்றும், யாருக்காகவும் தாங்கள் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, திமுகவுடன் இருந்தால்தான் வெற்றி என்பது கூட்டணிக் கட்சிகளுக்குத் தெரியும் என்றும், வேறு எங்குச் சென்றாலும் அவர்களுக்கு ஒரு சீட் கூடக் கிடைக்காது என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தரப்பிலிருந்து ஆட்சியில் பங்கு (Power Sharing) வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்றும் ரகுபதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதற்கிடையில், திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கூட்டணி உறுதியாக இருப்பதாகவும் டிஎன்சிசி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
