தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் நிர்வாகம் சார்பில், 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பகுதி நேர ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இறைப்பணியில் ஆர்வமுள்ள, சைவ சம்பிரதாயத்தைப் பின்பற்றும் இந்து சமயத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 01.07.2026 அன்று 14 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயதிற்கு உட்பட்டவராகவும், நல்ல உடல் மற்றும் குரல் வளம் மிக்கவராகவும் இருக்க வேண்டும்.
இது 4 ஆண்டுகள் கொண்ட பகுதி நேரப் படிப்பாகும். மாணவர்களின் வசதிக்காக வார நாட்களில் காலை 6.00 முதல் 8.00 மணி வரை அல்லது மாலை 7.00 முதல் 9.00 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமாகவும் வகுப்புகள் நடத்தப்படும். இப்பயிற்சியில் சேர்ந்து படிக்கும் பகுதி நேர மாணவர்களுக்கு, அவர்களின் கல்வி மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மாதந்தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இச்சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் பெறலாம் அல்லது www.hrce.tn.gov.in மற்றும் www.vadapalaniandavartemple.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் கல்வி, வயது, வருமானம், சாதி, நன்னடத்தைச் சான்று, குடும்ப அட்டை மற்றும் முகவரிச் சான்றுகளின் நகல்களை இணைத்து, 18.06.2026 அன்று மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8939083753, 9047810365 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
