தமிழக அமைச்சரவை இன்று விரிவாகிறது.. காங்கிரஸ் அமைச்சர்கள் விசிக, முஸ்லீம் லீக் மிஸ்ஸிங் ஏன்..? CM விஜயின் தீடீர் முடிவு…!!

By Swetha on வைகாசி 21, 2026

Spread the love

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி முதலமைச்சர் உட்பட மொத்தம் 34 அமைச்சர்கள் வரை இடம்பெற வாய்ப்புள்ள நிலையில், தற்போது வரை 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். நிர்வாகப் பணிகள் தொய்வின்றி விரைவாக நடைபெற ஏதுவாக, காலியாக உள்ள மீதமுள்ள இடங்களை நிரப்பும் நோக்கில் இந்த திடீர் அமைச்சரவை விரிவாக்க முடிவை முதலமைச்சர் விஜய் எடுத்துள்ளார்.

இந்த புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இன்று பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக சார்பில் நீண்டகாலமாக ரசிகர் மன்ற நிர்வாகிகளாகப் பயணித்து சட்டமன்ற உறுப்பினர்களாக வென்ற கல்லணை, தமிழ் பார்த்திபன், மொஹமது ஃபர்வாஸ் போன்ற புதிய முகங்களுக்கும், பெண்களின் பிரதிநிதித்துவமாக சத்யபாமா, காமாட்சி, விஜயலட்சுமி ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கூட்டணிக் ஒப்பந்தப்படி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 அமைச்சர் பதவிகளுக்கு ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

   

அதேவேளையில், சமூக நீதி அடிப்படையிலான அமைச்சரவை அமைய வேண்டும் என்பதற்காக விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அக்கட்சிகளின் இறுதி முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாததால், இன்றைய பதவியேற்பு விழாவில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. விசிக சார்பில் வன்னி அரசு அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இவர்களுக்கான அமைச்சர் பதவிகள் இன்னும் சில தினங்கள் கழித்து நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.