“2026 தேர்தல் பட்ஜெட்: ‘கனவு இல்லம்’ முதல் ‘டைடல் பார்க்’ வரை… ஸ்டாலின் அரசின் மினிமம் கேரண்டி…..!

By Nanthini on மாசி 17, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அவரது உரையில், தமிழக அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள சூழலில், இந்த பட்ஜெட் மக்கள் நலத்திட்டங்களுக்கும், அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் மகளிருக்கான நலத்திட்டங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களுக்கு அண்மையில் தலா 5,000 ரூபாய் (உரிமைத் தொகையுடன் கோடைக்கால சிறப்புத் தொகை) வழங்கப்பட்டதை அமைச்சர் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். மேலும், விடியல் பேருந்து பயணம் மூலம் பெண்கள் மாதம் சராசரியாக 888 ரூபாய் வரை சேமிப்பதாகத் தெரிவித்த அவர், ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் சுமார் 7 லட்சம் மாணவியர் பயனடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 1.41 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருப்பது பெண் அதிகாரமளித்தலில் தமிழகத்தின் சாதனையாக முன்வைக்கப்பட்டது.

   

கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறையிலும் இந்த பட்ஜெட் பெரும் நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு 48,534 கோடி ரூபாயும், உயர் கல்விக்கு 8,505 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை உலகளாவிய செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்ற ‘தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் 2030’ என்ற புதிய திட்டம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய இடங்களில் 1,070 கோடி ரூபாய் செலவில் புதிய ‘டைடல்’ பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், 9 மாவட்டங்களில் மினி ஐ.டி பூங்காக்கள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

   

உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களைப் பொறுத்தவரை, அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ (TAPS) செயல்படுத்த 11,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிப் பங்கீட்டைக் குறைப்பதாகவும், இதனால் மாநிலத்தின் கடன் சுமை 10.62 லட்சம் கோடி ரூபாயாக உயரக்கூடும் என்றும் அமைச்சர் கவலை தெரிவித்தார். இருந்தபோதிலும், இடர் காலங்களிலும் தமிழகம் தொடர்ந்து இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டி வருவதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.