தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரியமிக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளையும் தோற்கடித்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இந்த அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்து, புதிய ஆட்சியில் பங்கெடுத்துள்ள நிலையில், கட்சியின் எதிர்காலப் பயணம் மற்றும் புதிய கூட்டணி குறித்து சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தொண்டர்களிடம் விரிவாகப் பேசினார்.
இந்த கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சி இத்தனை காலம் தனது சொந்த பலத்தை உணராததால் தான் பின்னடைவைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டார். “தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க நம்முடைய 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு சாவி போல மிக முக்கியமாகத் தேவைப்பட்டது. அதன் காரணமாகவே நாம் இந்த ஆட்சியில் பங்கெடுத்துள்ளோம். நமது கட்சியின் சார்பில் விஸ்வநாத் மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இருவர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இனி இது நம்முடைய கூட்டணி ஆட்சி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. மக்கள் மற்றும் தொண்டர்களின் கல்வி, மருத்துவம் சார்ந்த நியாயமான கோரிக்கைகளை நம் அமைச்சர்களிடம் நேரடியாகக் கேட்டுப் பெறலாம். புதிய அமைச்சர்கள் இருவரும் வாரத்திற்கு ஒருமுறை சென்னை காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களைச் சந்திக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசைப் பாராட்டிப் பேசிய அவர், தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு லஞ்சமில்லாத, ஒரு ‘க்ளீன் கவர்ன்மென்ட்’ அமைந்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். நேர்மையான ஆட்சி என்றாலே காமராஜர் ஆட்சி தான் நினைவுக்கு வரும் என்றும், அதற்குப் பிறகு வந்த ஆட்சிகள் எதுவும் நேர்மையாக இல்லை என்றும் விமர்சித்தார். தவெக இளைஞர்களால் ஆன கட்சி என்றும், முதலமைச்சர் விஜய் மிக நேர்மையான ஆட்சியை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்ட தாகூர், “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” என்ற முழக்கத்தோடு காமராஜர் பிறந்தநாளைக் கொண்டாடி, காங்கிரஸ் 2.0 (Congress 2.0) என்ற புதிய பரிமாணத்தில் கட்சி மேலும் பலமடையும் என்று தனது உரையில் உறுதியளித்தார்.
