துபாயில் ஆசிய கோப்பை 2025 இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியானது 19.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்தநிலையில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் ,ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையிலிருந்து ஆசிய கோப்பை வாங்குவதற்கு இந்திய அணிகள் மறுத்து விட்டார்கள்.
பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்ததைத் தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் உணர்ச்சிபூர்வமான மற்றும் தேசபக்தி நிறைந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை வென்றுள்ளது. போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், போட்டியின் அனைத்து ஆட்டங்களிலிருந்தும் தனது முழு ஊதியத்தை இந்திய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். இந்தப் போட்டியில் நான் விளையாடிய அனைத்து ஆட்டங்களுக்கும் எனது ஊதியத்தை இந்திய ராணுவத்திற்கு வழங்க விரும்புகிறேன், என்று சூர்யகுமார் உணர்ச்சி பொங்க கூறினார். இந்திய ரசிகர்களுக்கு இந்த வெற்றி இனிமையாக இருந்தாலும், போட்டிக்குப் பிந்தைய சூரியகுமார் யாதவின் அர்ப்பணிப்புதான் மகிழ்ச்சியான தருணமாக மாறியது.
