நடிகர் சுருளிராஜன், தமிழ் சினிமாவில் மிகச்சில காலமே கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். மாந்தோப்பு கிளியே என்ற படத்தில் இவரது கஞ்சத்தனம் கேரக்டர் வெகுகாலம் ரசிகர்களால் சிலாகித்து ரசித்து பேசப்பட்டது. மகா கஞ்சனாக அவர் அதில் நடித்திருப்பார். ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தில், வில்லன் ஜெய்சங்கரின் கணக்குப்பிள்ளையாக நடித்திருப்பார். இவர் பேசும் மொழி ரசிக்கும்படியாக இருக்கும்.
சுருளிராஜன், நீண்ட காலம் இருந்த நிறைய படங்களில் நடித்து பேரும் புகழும் அடைய வேண்டியவர், ஆனால், இளம் வயதில் அதாவது 42 வயதிலேயே சுருளிராஜன் இறந்து போனார். அதற்கு முக்கிய காரணம், அவரது மதுப்பழக்கம். ஆனாலு அவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சிலாகிக்கப்பட்டு வருகின்றன.
சுருளிராஜன் நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்த போது அவருக்கு முதல் முதலில் வாய்ப்பளித்தது மலையாள இயக்குனரான ஜோசப் தளியத்தான். அவர் இயக்கிய இரவும் பகலும் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க வைத்தார். ஆனாலும் அவருக்கு நல்ல வேடம் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் அவர் அடுத்த படமான ‘காதல் படுத்தும் பாடு’ படத்தில் நல்ல வேடம் கொடுத்துள்ளார். அதற்காக அவருக்கு 100 ரூபாய் அட்வான்ஸும் கொடுத்துள்ளார்.
அதுவரை 100 ரூபாய் சம்பளமாகக் கூட வாங்காத சுருளிராஜன், அட்வான்ஸாக நூறு ரூபாய் வாங்கிய மகிழ்ச்சியை தன்னுடைய நண்பர்களிடம் சொல்லவேண்டும் என வீட்டுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால் அவரிடம் அந்த நூறு ரூபாய் தவிர வேறு காசு இல்லாததால் பஸ்ஸில் செல்லாமல் நடந்தே சென்றுள்ளார்.
அந்த நூறு ரூபாயை மாற்றி டிக்கெட் எடுத்தால் நண்பர்களிடம் நூறு ரூபாய் நோட்டைக் காட்ட முடியாதே என்று. அப்படி நூறு ரூபாய் பொத்தி பொத்தி எடுத்துச் சென்ற அவர்தான் பின்னாளில் முன்னணி நகைச்சுவை நடிகராக லட்சக்கணக்கில் சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
