நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மே 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக உருவெடுத்துள்ள இத்திரைப்படம், திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜிக்கு ரூ. 30 லட்சம் மதிப்புள்ள புதிய ‘Mahindra BE6 பேட்மேன் எடிஷன்’ மின்சார காரை சூர்யா பரிசாக வழங்கியுள்ளார்.
இந்தப் புதிய காரில் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இருவரும் சென்னை சாலைகளில் ஜாலியாக ‘ரவுண்ட்ஸ்’ வரும் வீடியோ ஒன்றை ஆர்.ஜே. பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சூர்யா காரை ஓட்ட, அவருடன் பயணிக்கும் மகிழ்ச்சியான தருணங்களை அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக, படத்தின் வெற்றிக்காக உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்களான இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு மற்றும் படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன் ஆகியோருக்கும் சூர்யா இதே போன்ற காரை பரிசாக வழங்கி கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்களுக்குள் இருக்கும் இந்த அழகான நட்பு குறித்தும், சூர்யாவின் பெருந்தன்மை குறித்தும் ஆர்.ஜே. பாலாஜி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். “முதல் நாளிலிருந்தே நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இந்த மாபெரும் வெற்றிக் கனவை நனவாக்கியுள்ளது; சூர்யா சார் இல்லாமல் இது சாத்தியமில்லை, நீங்கள் என் வாழ்க்கையை என்றென்றும் மாற்றிவிட்டீர்கள்” என நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் இந்த வெற்றிக் கூட்டணியும், சூர்யாவின் அன்பான கார் பரிசும் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
