மங்காத்தாவுல இருந்த சுதந்திரம் எனக்கு சூர்யா படத்துல இல்ல….. ‘மாசு என்கிற மாசிலாமணி’ தோல்வி குறித்து வெங்கட்பிரபு சொன்ன தகவல்!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனர்களில் வெங்கட்பிரபுவும் ஒருவர். அவர் இயக்கிய சென்னை 28, சரோஜா, மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இப்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்குனர் ஆவதற்கு முன்னர் அவர் ஏப்ரல் மாதத்தில் மற்றும் சிவகாசி ஆகிய படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். பின்னர் உன்னை சரணடைந்தேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகுதான் அவர் சென்னை 28 படத்தை இயக்கினார்.

   

மங்காத்தா வெற்றிக்குப் பிறகு அவரை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்க ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அதில் ஒன்றில் கார்த்தியும் மற்றொன்றில் சூர்யாவும் நடித்தனர். சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய ‘மாசு என்கிற மாசிலாமணி’ திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

இந்த படத்தின் தோல்வி குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசும்போது பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் வெங்கட் பிரபு. அதில் “நாங்கள் மாசு படம் என்ன மாதிரியான படம் என்பதை ரசிகர்களுக்கு சரியாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன். படத்தின் டைட்டிலை சில முறை மாற்றினோம். படத்தில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம்.

இப்போது பார்த்தால் அந்த படம் மோசமான படமாக தெரியாது. ஆனால் ரசிகர்களுக்கு இது ஒரு பேய் படம் என்பதை நாங்கள் டிரைலர் மூலமாக சொல்லி இருக்கவேண்டும். அதை சஸ்பென்ஸாக விட்டது தவறாகி விட்டது.

நான் இயக்கிய மங்காத்தா படம் முதற்கொண்டு அனைத்து முடிவுகளையும் நான்தான் எடுப்பேன். ஆனால் இந்த படத்தில் பலரிடம் இருந்தும் பல கருத்துகள் வரும். அவர்கள் ஒரு பெரிய டீமே இருந்தார்கள். ஒவ்வொரு நாள் ஷூட் முடிந்ததும் கமெண்ட் வரும். இது எனக்கு புதிதாக இருந்தது. இது தவிர எனக்கு எந்த வருத்தமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.