டாய்லெட்டில் ஏற்படும் பழுப்பு நிறக் கறைகள் மற்றும் கடின நீர் படிவுகளை அகற்றக் கடைகளில் கிடைக்கும் கடுமையான கெமிக்கல் கிளீனர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சமையலறையில் உள்ள சமையல் சோடா மற்றும் வெள்ளை வினிகரைப் பயன்படுத்தலாம். வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் சுண்ணாம்புப் படிவுகளைக் கரைக்கும்; சமையல் சோடா கறைகளை மெதுவாக அகற்றும். இவை இரண்டையும் ஒன்றாகக் கலக்கும்போது உருவாகும் நுரை, கறைகளின் ஆழம் வரை ஊடுருவி அவற்றை எளிய முறையில் தளர்த்துகிறது. இந்த இயற்கை முறையில் இரசாயன நெடி இல்லாமல் தேய்க்கும் வேலையையும் வெகுவாகக் குறைக்க முடியும்.
சுத்தம் செய்ய முதலில் ஒரு கப் வெள்ளை வினிகரை டாய்லெட் கோப்பையின் உட்புறம் ஊற்றி பிரஷ்ஷால் பரப்பி விட வேண்டும். அதன் மீது ஒரு கப் சமையல் சோடாவைத் தூவி, மீண்டும் 1 முதல் 2 கப் வினிகரை மெதுவாக ஊற்றினால் கலவை நுரைத்துப் பொங்கும். இந்த நிலையை அப்படியே 30 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும் . நேரம் முடிந்ததும், பிரஷ்ஷால் லேசாகத் தேய்த்து ஃப்ளஷ் செய்தால் கறைகள் அனைத்தும் நீங்கி டாய்லெட் பளிச்சென்று மாறும்.
மிகவும் கடினமான சுண்ணாம்புப் படிவுகள் இருந்தால், வினிகருக்குப் பதிலாக ஒரு லிட்டர் கொதிக்கும் நீரில் 3 தேக்கரண்டி சிட்ரிக் அமிலத்தைக் கலந்து கோப்பையில் ஊற்றி 30 நிமிடங்கள் கழித்துத் தேய்க்கலாம். கறைகள் மீண்டும் வராமல் இருக்க இந்த முறையை வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ செய்யலாம். முக்கியமாக, இந்த கலவையை ப்ளீச் போன்ற பிற கெமிக்கல்களுடன் சேர்க்கக் கூடாது; மேலும் சுத்தம் செய்யும்போது கையுறை அணிவதும் காற்றோட்டமான சூழலைப் பராமரிப்பதும் அவசியமாகும்.
