குளிர்காலத்தில் முடியைப் பராமரிப்பதற்கான சில முக்கியமான குறிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சரியாகப் பின்பற்றினால், முடி வறட்சி அடைவதைத் தவிர்த்து ஆரோக்கியமாகப் பேண முடியும். கடுமையான சூடான நீரில் தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்கவும். மிகவும் சூடான நீர், உச்சந்தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி, முடியை வறண்டு போகச் செய்துவிடும். எனவே, எப்போதும் வெதுவெதுப்பான நீரில் தலைக்குக் குளிப்பதே சிறந்தது.
குளித்த பிறகு, சாதாரண கடினமான டவல்கள் கொண்டு முடியைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இது முடி உடைவதற்கும், சிக்குகள் விழுவதற்கும் காரணமாகும். அதற்குப் பதிலாக, மைக்ரோஃபைபர் துண்டு அல்லது ஒரு பழைய பருத்தி டி-ஷர்ட்டைப் பயன்படுத்தி, முடியை மென்மையாக ஒத்தி எடுப்பது நல்லது.
பருத்தித் தலையணை உறைகள் உறங்கும் போது முடியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, முடி உலர்ந்து, சிக்குகள் உருவாக வழிவகுக்கும். எனவே, சில்க் அல்லது சாட்டின் போன்ற மென்மையான தலையணை உறைகளைப் பயன்படுத்துவது, முடியின் உராய்வைக் குறைத்து, முடி உடைவதைத் தடுக்கும்.
குளிர்காலத்தில் தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பதைத் தவிர்த்து, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் ஷாம்பு பயன்படுத்தினால் போதும். இது முடியில் இயற்கையான எண்ணெய்ப் பசை நீக்கப்படாமல், வறட்சியில் இருந்து பாதுகாக்கும்.
ஈரமான முடியுடன் குளிரான காற்றில் வெளியே செல்வது, முடி விரைவாக உறைந்து எளிதில் உடையும் நிலைக்குத் தள்ளும். ஆகவே, வெளியே செல்வதற்கு முன்பு தலைமுடி முழுவதுமாக உலர்ந்திருப்பதை உறுதி செய்யவும். ஹேர் ட்ரையர் போன்ற ‘ஹீட் ஸ்டைலிங்’ கருவிகளைத் தவிர்த்து, இயற்கையாக முடியை உலர விடுவது ஆரோக்கியமானது.
ஹேர் ஸ்ப்ரே போன்ற ஸ்டைலிங் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் ஆல்கஹால் கலக்காத, ஈரப்பதம் அளிக்கும் க்ளிசரின் அல்லது இயற்கை எண்ணெய்கள் போன்ற பொருட்கள் உள்ளதா என்று பார்த்து வாங்குவது அவசியம்.
