தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.
சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அவர் இயக்கத்தில் கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தான, சூரி மற்றும் யோகி பாபு என அனைத்து முன்னணி நகைச்சுவை நடிகர்களும் நடித்துள்ளனர்.
சுந்தர் சியின் படங்களைப் போலவே அவர் தரும் நேர்காணல்களும் நான் ஸ்டாப் காமெடியாக அமையும். அப்படி சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் அவர் இயக்கிய உன்னை தேடி திரைப்படத்தின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் இந்த படத்தை இயக்கும் போது என் மனைவி கர்ப்பமாக இருந்தார். அவர் மகள் பிறந்தால் என்ன பெயர் வைக்க வேண்டும் என யோசித்து ‘மாளவிகா’ என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.
அன்றைக்கு நான் கம்போசிங்குக்காக தேவா சாரோடு இருந்தேன். அப்போது ட்யூன் போட்டுக் கொண்டிருக்கும் போது ‘எதாவது ஒரு பேர் சொல்லுங்க சார்’ என்றார். நான் அப்போது திடீரென்று மாளவிகா என்று சொல்லிவிட்டேன். அந்த வார்த்தையும் ட்யுனுக்குள் உட்கார்ந்து விட்டது. அதனால் அந்த படத்தின் கதாநாயகிக்கும் மாளவிகா என்று பெயர் வைத்துவிட்டோம். அந்த பெயரையே ஸ்வேதாவும் தனக்கு வைத்துக்கொண்டு வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தார்.
நான் என் குழந்தைக்காக தேர்வு செய்த பெயரை உன் படத்துக்கு பயன்படுத்திகிட்டியே என என் மனைவி என்னிடம் சண்டை போட்டார்” என ஜாலியாக பகிர்ந்துள்ளார்.