15 வருஷம் முதலீடு… 3 மடங்கு ரிட்டர்ன்ஸ்…! மகளின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் போஸ்ட் ஆபிஸின் அசத்தலான திட்டம்…!!

By Devi Ramu on பங்குனி 29, 2026

Spread the love

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு வழங்கும் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டம்’ (சுகன்யா சம்ரிதி யோஜனா) பெற்றோர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இத்திட்டத்தின் கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலையங்களில் கணக்கைத் தொடங்கலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு இச்சலுகை உண்டு (இரட்டையர் எனில் மூன்று பேர் வரை). இதில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிக்க முடியும். 15 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டிய இத்திட்டம், தொடங்கிய 21 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். உயர்கல்வி அல்லது திருமணத்திற்காக 18 வயதிற்குப் பிறகு பணத்தைத் திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.

இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வங்கிகளின் வைப்புத் தொகையை விடக் கூடுதலான 8.2 சதவீத கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. உதாரணமாக, உங்கள் மகளின் பெயரில் மாதம் ரூ.8,334 (ஆண்டுக்கு ரூ.1 லட்சம்) என 15 ஆண்டுகள் சேமித்தால், நீங்கள் முதலீடு செய்யும் ரூ.15 லட்சம் வட்டியுடன் சேர்ந்து 21-வது ஆண்டில் சுமார் ரூ.46,18,385-ஆக உயரும். இது உங்களின் மொத்த முதலீட்டை விட மூன்று மடங்கு லாபத்தை அளிப்பதோடு, இதற்கு வரி விலக்கும் உண்டு. உங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும் இத்திட்டத்தில் இணைந்து, அவர்களின் எதிர்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாப்பாக மாற்றிக் கொள்ளலாம்.