மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் துணை சபாநாயகரும், மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான ஆஷிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூர்ஹாட் தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், பள்ளிக்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் இவர் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டு தற்போது காவல்துறையினரால் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவரது அறையிலிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட தற்கொலைக் குறிப்பில் பல உருக்கமான மற்றும் பரபரப்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தான் சார்ந்திருந்த கட்சியின் தவறுகளையும் பழிகளையும் இனியும் தன் வாழ்நாள் முழுவதும் சுமக்க முடியாது என வேதனை தெரிவித்துள்ள அவர், அரசியலுக்கு வந்ததே தான் செய்த மாபெரும் தவறு என மனம் வருந்தியுள்ளார். மேலும், தனது பொது வாழ்வில் எந்தவொரு பணிக்காகவும் ஒரு பைசா கூட லஞ்சமாகப் பெற்றதில்லை எனத் தனது நேர்மையை வலியுறுத்தியுள்ள ஆஷிஷ் பானர்ஜி, தனது மரணத்திற்கு வேறு யாரும் பொறுப்பல்ல என்றும் அந்த கடிதத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
