திருச்சி செவிலியர் மரணத்தில் திடீர் ட்விஸ்ட்!.. மருத்துவர்கள் காரணமில்லை.. சிக்கிய ‘அந்த’ ஒரு மருந்து.. வெளியான பகீர் அறிக்கை..!!

By Muthu Mani on ஆனி 3, 2026

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு – கலைச்செல்வி தம்பதியினரின் மகள் சீதாலட்சுமி (19). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார். இவருக்கு மூக்கில் ஏற்பட்ட சதை வளர்ச்சி பாதிப்பிற்காக, தான் படித்து வந்த திருச்சி அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அறுவை சிகிச்சையின் போது மாணவி சீதாலட்சுமி திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோரையும், சக செவிலியர் மாணவிகளையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.

தேவைக்கு அதிகமான அளவில் மயக்க மருந்து (Anesthesia) கொடுக்கப்பட்டதே இந்த உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என உறவினர்களும், செவிலியர் மாணவிகளும் குற்றம்சாட்டினர். மருத்துவர்களின் தவறான சிகிச்சையைக் கண்டித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த மரணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டதன் பேரில், சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் இஎன்டி மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

   

விசாரணைக் குழு நடத்திய தீவிர ஆய்வில், அறுவை சிகிச்சையின் போது மாணவி உயிரிழந்ததற்கு மருத்துவர்களின் தவறு காரணம் அல்ல, மாறாக அங்கு பயன்படுத்தப்பட்ட ‘டெக்சாம்மெதாசோன்’ (Inj dexamethasone) என்ற தரமற்ற மருந்தே காரணம் என அதிர்ச்சியூட்டும் தகவல் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட பேட்ச் (Batch) மருந்தை உடனடியாக சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அந்த குறிப்பிட்ட பேட்ச் மருந்துகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தி, அவற்றை ஆய்வக சோதனைக்கு அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது மருத்துவத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.