கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உணவகம் ஒன்றில், உணவு அருந்திக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பன்னர்கட்டா அருகே உள்ள கொட்டிகெரே பகுதியில் அமைந்துள்ள குரு கிரீன்ஸ் குடும்ப உணவகத்தில் பணியாற்றி வந்த சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். ஹாசன் மாவட்டத்தின் சன்னராயப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த உணவகத்தில் காசாளராகப் பணியாற்றி வந்தார்.
அக்டோபர் 30-ஆம் தேதி காலை வழக்கம் போல் பணிக்கு வந்த சந்துரு, காலை சுமார் 11:40 மணியளவில் உணவகத்தின் மேஜையில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை அருந்திக்கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரெனக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சில நொடிகளிலேயே நெஞ்சைப் பிடித்தபடி நிலைகுலைந்த அவர், அங்கிருந்த மேஜையின் மீதே முகங்குப்புறச் சரிந்து விழுந்து மயக்கமடைந்தார். இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அனைத்தும் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
சந்துரு மயங்கி விழுந்ததைக் கண்ட சக ஊழியர்கள் உடனடியாக ஓடிவந்து அவருக்கு முதலுதவி அளித்துக் காப்பாற்ற முயன்றனர். பின்னர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஹுலிமாவு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
