திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கீழக்கருவேலங்குளம் பகுதியைச் சேர்ந்த பன்றி பண்ணை உரிமையாளர் ராமகிருஷ்ணன் (52) என்பவர் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் சாலையில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், நாங்குநேரி டிஎஸ்பி சதிஸ்கண்ணன் மற்றும் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ராமகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ராமகிருஷ்ணனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சத்யா (44) என்பவருக்கும் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. குடும்பத்தினர் கண்டித்தும் தொடர்ந்த இந்த உறவின் பின்னணியில், சம்பவத்தன்று இரவு சத்யாவின் வீட்டுக்குச் சென்ற ராமகிருஷ்ணனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா, விஷயம் வெளியில் தெரிந்தால் தன் குடும்பத்திற்குப் பிரச்சினை வரும் என அஞ்சி, உடலை 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று சாலையில் வீசியுள்ளார்.
மரணத்தை மறைக்க முயன்ற குற்றத்திற்காக சத்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், உடலை அப்புறப்படுத்தியது மற்றும் சம்பவத்தை மறைத்தது தொடர்பாக சந்தேக மரணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளத்தொடர்பில் இருந்த பெண் வீட்டில் உயிரிழந்த நபரின் உடல் சாலையில் வீசப்பட்ட சம்பவம் களக்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
