இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவைத் தொடர்ந்து, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மற்றும் திரையுலகமும் அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்து அஞ்சலி செலுத்தியது. வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஜூன் 10 அன்று அவர் மறைந்ததாகக் கூறப்பட்டாலும், கடந்த ஆண்டில் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மரணம் அவரை மனதளவில் பெரிதும் உருக்குலையச் செய்திருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாரதிராஜாவின் ஆசைப்படி, தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டிலேயே உடல் நல்லடக்கம் செய்வதற்கான இறுதிச் சடங்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இந்த இறுதிச் சடங்கின் போது, பாரதிராஜாவின் உடலுக்கு அருகில் அமர்ந்திருந்த மனோஜ் பாரதிராஜாவின் மகளிடம், பாரதிராஜாவின் மகள் ஏதோ கூற, இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மனோஜ் மனைவி மகள்களை விரட்டிய பாரதிராஜா மகள்.. இறுதி சடங்கில் நடந்தது என்ன..? சொத்துக்காக பஞ்சாயத்து.!#Director | #BharathiRaja | #ActressRadhika | #Manoj | #PropertyIssue | #Family | #Funeral | #PolimerNews pic.twitter.com/x7UsLTusQd— Polimer News (@polimernews) June 12, 2026
இதனையடுத்து கோபமடைந்த மனோஜின் மகள் இருக்கையை விட்டு எழுந்து செல்ல முயன்றபோது, பாரதிராஜாவின் மகள் அவரது கையைப் பிடிக்க, அதைத் தட்டிவிட்டு மனோஜ் மகள் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த குடும்ப வாக்குவாதத்தால் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சற்றுத் தள்ளி நின்று இந்தச் சம்பவத்தைக் கவனித்துக் கொண்டிருந்த நடிகை ராதிகா சரத்குமார், நிலைமையை உடனே சுதாரித்துக் கொண்டு அவர்கள் அருகில் சென்றுள்ளார். பாரதிராஜாவின் மகளிடம் இரு கைகளையும் கூப்பிக் கெஞ்சிப் பேசி, சமாதானம் செய்ய முயன்ற ராதிகா, அந்தப் பிரச்னை மேலும் பெரியதாக வளரவிடாமல் தடுத்து நிறுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் சூழலில், குடும்பத்திற்குள் இருக்கும் இந்த ஒற்றுமையின்மையைப் பார்க்கக் கூடாது என்றுதான் அவர் மறைந்துவிட்டாரோ என நெட்டிசன்கள் வருத்தம் தெரிவிப்பதுடன், சமயோசிதமாகச் செயல்பட்டுப் பிரச்னையைத் தடுத்த ராதிகாவைப் பாராட்டியும் வருகின்றனர்.
