தெலங்கானா மாநிலம் கொத்தகுடேம் டூ டவுன் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த 55 வயது கே. வெங்கன்னா என்பவர், ஹைதராபாத் டேங்க் பண்ட் பகுதியில் நடைபெற்ற கணபதி விசர்ஜனப் பாதுகாப்புப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது டேங்க் பண்ட் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த ஸ்கூட்டர் ஒன்று, எதிர்பாராத விதமாக சப்-இன்ஸ்பெக்டர் வெங்கன்னா மீது பலமாக மோதித் தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய நபர் வண்டியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
படுகாயமடைந்த அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காகக் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடமைக்கு வந்த இடத்தில் காவல் அதிகாரி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
