மத்தியப் பிரதேச மாநிலம் போபால் (Bhopal) ராதிபட் பகுதியில் அமைந்துள்ள சாமுரோதயா வித்யாலயா பள்ளி விடுதியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு உணவுப் பாதுகாப்பு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விடுதியில் தங்கிப் பயின்று வரும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள 13 மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உருளைக்கிழங்கு கூட்டு உணவில் பல்லி விழுந்து கிடந்துள்ளது. இதனைத் தெரியாமல் சாப்பிட்ட மாணவிகளுக்குச் சிறிது நேரத்தில் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
உடனடியாகப் பள்ளியின் சார்பில் அவர்கள் அனைவரும் நகரில் உள்ள ஜெய்பிரகாஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது அனைத்து மாணவிகளின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், மாணவர்களின் உடல்நிலை குறித்துத் தங்களுக்குப் பள்ளி நிர்வாகம் உடனடியாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், வாட்ஸ்அப் குழு மூலமாகவே விசாரித்துத் தெரிந்துகொண்டு மருத்துவமனைக்கு விரைந்ததாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பள்ளிகளின் விடுதிகளில் நிலவும் சுகாதாரமற்ற உணவு முறை குறித்துப் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
