திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பள்ளி நேரத்தில் போதுமான பேருந்து வசதி இல்லாததால், மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதிய சாலை வசதி இல்லாததை காரணம்காட்டி பேருந்துகள் இயக்கப்படாததால், நீண்ட தூரம் நடந்தே செல்ல வேண்டியுள்ளதாகவும், இதனால் பள்ளிக்கு தாமதமாகச் செல்லும்போது ஆசிரியர்கள் தங்களை வகுப்பிற்கு வெளியே நிற்க வைப்பதாகவும் மாணவிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் .
போக்குவரத்து வசதி இல்லாத தனிமையான சாலைகளில் நடந்து செல்லும்போது, இரவு நேரங்களில் இளைஞர்கள் தங்களை வம்பிழுப்பதாக மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர். “பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்க வருகிறார்கள்” என அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கோரி மாணவர்கள் வீதியில் இறங்கி போராடுவது, அப்பகுதியில் நிலவும் நிர்வாக மெத்தனத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
