டெல்லியில் அத்துமீறல்… ராகுல் காந்தி கைது… ‘உடனே ரத்து செய்ங்க…’ நீட் போராட்டத்தால் உருவான புது சர்ச்சை… ஆதவ் அர்ஜுனா ஆவேசம்… மாணவர்களுக்கு ஆதரவாக அதிரடி…!

By Visaka on ஆடி 22, 2026

Spread the love

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டத்திற்கு ஆதரவளித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி ஆகியோரை டெல்லி காவல்துறை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களைப் புரிந்துகொள்ளாமல், அவர்களைக் கடுமையாகத் தாக்கி ஒன்றிய அரசு கைது செய்திருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நீட் தேர்வு என்ற அறிவிப்பு வந்தபோதே அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்திலிருந்து தான் ஒலித்தது என்றும், இன்று அந்த எதிர்ப்புக் குரலை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

மாணவர் சமுதாயத்தின் நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு நடவடிக்கையையும் மிகவும் உறுதியாக எடுத்து வைப்போம் என்றும், மாணவர்களின் நலனுக்கும் அவர்களின் உரிமைக் குரலுக்கும் எப்போதும் துணையாக நிற்போம் என்றும் உறுதியளித்துள்ளார்.