மத்தியப்பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள தேவி அகில்யா விஸ்வவித்யாலயா பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவிகளைத் தவறான பாதைக்குத் தூண்டிய புகாரில் விடுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தரவு அறிவியல் முதலாம் ஆண்டு பயிலும் அந்த மாணவி, மற்ற மாணவிகளையும் தங்களுக்கு என்று காதலர்களை உருவாக்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், அறிமுகமில்லாத நபர்களுடன் மொபைல் செயலிகள் மூலம் வீடியோ கால் பேச வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விடுதி காப்பாளரிடம் ஐந்து மாணவிகள் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. விடுதி காப்பாளர் நடத்திய சோதனையில் அந்த மாணவியின் அறையிலிருந்து சில ஆட்சேபனைக்குரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக நிர்வாகம் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்த மாணவி மீதான புகார்கள் குறித்து இந்தக் குழு விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
