இன்றைய காலகட்டத்தில் பல மாணவர்கள் படிப்பை விடுத்து சமூக வலைதளங்களிலும், அலைபேசிகளிலும் நேரத்தை வீணடித்து தங்கள் எதிர்காலத்தைத் தொலைத்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற இடைநிலைத் தேர்வின் போது ஒரு மாணவர் தனது விடைத்தாளில் எழுதியிருந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தெரியாத அந்த மாணவர், தனக்குத் தாய், தந்தை யாரும் இல்லை என்றும், திருத்தும் ஆசிரியரே தனக்கு தெய்வம் என்றும் குறிப்பிட்டுத் தன்னைத் தேர்ச்சி பெறச் செய்யுமாறு உருக்கமாக வேண்டியுள்ளார்.
மேலும், தனது கோரிக்கையை வலியுறுத்த ஆசிரியர் காலில் விழுந்து ஒரு மாணவர் வணங்குவது போன்ற ஓவியத்தையும் அந்த விடைத்தாளில் அவர் வரைந்துள்ளார். இந்த விடைத்தாளின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது கல்வித் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் பெரும் பணம் செலவழித்து படிக்க வைக்கும் சூழலில், தேர்வின் போது இத்தகைய முறையற்ற வழிகளில் மதிப்பெண் பெற முயற்சிக்கும் மாணவர்களின் போக்கு கவலைக்குரியதாக இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
