மகாராஷ்டிர மாநிலம் அகில்யாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கிதா சாங்லே என்ற மாணவி, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மறுதேர்வில் 166 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். தன் மீது மிகுந்த அன்பு காட்டிய பெற்றோரின் மருத்துவக் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த அவர், தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் கைப்பற்றிய அவரது உருக்கமான தற்கொலைக் கடிதத்தில், “என் மீது அளவில்லா அன்பு காட்டி எனக்காகச் அனைத்தையும் தியாகம் செய்தீர்கள்; ஆனால் உங்கள் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தோற்றுவிட்டேன், அண்ணன் பெற்றோரைக் கவனமாகப் பார்த்துக்கொள்” என்று எழுதியுள்ளார். நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக நாடு முழுவதும் பல மாணவர்கள் உயிரிழந்த சூழலில், இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
