மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள கண்டாலா கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான சூரஜ் சுபாஷ் ஷிண்டே என்ற இளைஞர், நீட் தேர்வில் எதிர்பார்ப்பை விடக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றதால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் கிராமத்தில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த வேளையில், சூரஜ் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், “மன்னித்து விடுங்கள் அம்மா, அப்பா! அடுத்த ஜென்மத்தில் உங்களுக்காக நான் கண்டிப்பாக மருத்துவராக மாறிக் காட்டுகிறேன், உடலையும் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு வைஜாபூர் துணை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வைஜாபூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
