சென்னை திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த தனுஷ் (16) என்ற மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிளஸ் 2 மாணவர் ஒருவருக்கும், தேர்வில் தேர்ச்சியடையாமல் பிளஸ் 1 படிக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே “யார் சீனியர்” என்ற தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இறந்துபோன தனுஷ் பிளஸ் 2 மாணவருக்கு ஆதரவாகப் பேசியதால், மாலையில் வீட்டிற்குச் செல்ல பஸ் ஏற முயன்றபோது 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரை அஜாக்ஸ் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கைதான மாணவர்கள் அளித்த முதற்கட்ட வாக்குமூலத்தில், தனுஷைத் தாக்கியவுடன் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்ததாகவும், கையில் இரும்புச் சாவி கொடுத்துப் பார்த்தும் அவர் எழுந்திருக்காததால் பயந்து ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும், உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே உண்மையான மரணக் காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாங்கல் வசந்த் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகனான தனுஷ், காயங்களுடன் சடலமாகக் கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய பிளஸ் 1 மாணவர், அவரது நண்பர்கள் மற்றும் பள்ளியில் இருந்து பாதியில் நின்ற பழைய மாணவர்கள் என பலர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், முதற்கட்டமாக 4 மாணவர்களைக் கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
