“அப்படி ஒரு சம்பவமே நடக்கல”…. வண்டலூர் பள்ளி மாணவி விவகாரத்தில் காவல்துறை அதிரடி விளக்கம்…. வெளியான பரபரப்பு அறிக்கை….!

By Nanthini on புரட்டாதி 25, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கண்டிகையில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவி ஒருவருக்குப் பாலியல் அத்துமீறல் நடந்ததாகப் பரவிய தகவல் தொடர்பாகத் தாம்பரம் மாநகரக் காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி இதுதொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மூத்த பெண் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் விரைவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாகப் பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதோடு, சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் அறிவியல் பூர்வமான தடயங்களும் கவனமாக ஆராயப்பட்டன.

   

இதுவரை நடத்தப்பட்ட தீவிர விசாரணை, சிறுமியின் வாக்குமூலம் மற்றும் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கூறப்பட்ட இச்சம்பவம் அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சிறுமியின் நலனைக் கருத்தில் கொண்டு சரிபார்க்கப்படாத வதந்திகளையும், போலிச் செய்திகளையும் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனக் காவல்துறை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.